இந்தியா மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது - மன்மோகன் சிங் பகீர்!

ஏப்ரல் 29, 2018 1323

புதுடெல்லி (29 ஏப் 2018): மோடியின் தலைமையிலான அரசு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசுக்கு எதிராக, ‘ஜன் ஆக்ரோஷ்’ என்ற பெயரில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி நடத்தியது. பேரணி முடிவில் ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மன்மோகன் சிங், "பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்தபின் எந்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

இதனால் சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் பாதுகாப்பிலும் பெருத்தஅச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன, வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்கள் கவலையில் இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிரான மனநிலை நாட்டு மக்களிடம் எழுந்துள்ளது. நாட்டில் சட்டம் ஓழங்கு மிக மோசமாகி சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. பெண்கள், சிறு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன

பிரதமர் மோடியின் அரசு நடக்கும் விதம் நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக நாட்டு மக்களின் முன், நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கும். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தும், ஆனால், அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கவிடாமல் பாஜக அரசு சதி செய்து முடக்கிவிட்டது.

நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாவிட்டால், அது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் . இந்திய அரசியல்சாசனம் நமக்கு கொடுத்திருக்கும் பரிசு ஜனநாயகம். அதை நாம் வலுப்படுத்த வேண்டும்.ஆனால், இன்று அரசியல்சாசனம் கொடுத்த விஷயங்கள், அமைப்புகள் எல்லாம் உதாசினப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற சூழல் உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவோ அல்லது விவாதத்துக்கு எடுக்கவோ இல்லாவிட்டாலே அது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டதாக கொள்ளவேண்டும்.

வைர வியாபாரி நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை கொள்ளையடித்து நாட்டை விட்டு தப்பி இருக்கிறார்கள். இதை ஒவ்வொருவரும் பார்த்தோம். இது நாட்டில் உள்ள வங்கிகளின் வலிமையையும் குறைத்துவிட்டது.

உலக அளவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருந்துவந்தது. சாமானிய மக்களை கடுமையாக பாதித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஏன் மோடி அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவில்லை.என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...