தீபக் மிஸ்ராவை பதவி நீக்கும் தீர்மானம் நிராகரிப்புக்கு எதிரான மனுவை காங்கிரஸ் திரும்பப் பெற்றது!

மே 08, 2018 700

புதுடெல்லி (08 மே 2018): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை திரும்பப் பெறும் தீர்மான நிராகரிப்புக்கு எதிரான மனுவை காங்கிரஸ் கட்சி திரும்பப் பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 வகையான குற்றச்சாட்டுக்களைக்கூறி அவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரக்கோரி குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. அதில் 64 எம்.பி.க்கள் கையொப்பம் இட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்தக் கடிதத்தை பரிசீலனை செய்தும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தும் மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, தலைமை நீதிபதியை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் என்பது சட்டவிரோதம், தவறானது, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று கூறி நிராகரித்தார். தனது முடிவை ஏறக்குறைய 10 பக்கங்களில் வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார். இதற்க எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வெங்கய்யா நாயுடுவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்கட்சி எம்.பிக்களான பிரதாப் சிங் பாஜ்வா மற்றும் ஹர்ஷன்ராய் யாஜினிக் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் மற்றும் நீதிபதி எஸ்.கே கவுல் அமர்வு முன்பு நேற்று மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில் நாட்டின் தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அமர்வு முன்பு இந்த மனுவை சமர்பித்ததாக கூறினார்.

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் பணி தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்குள் வருகிறது, எனவே இதுவற்றி விவாதித்து முடிவு செய்கிறோம். மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக செவ்வாய் கிழமை முடிவை அறிவிக்கிறாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி மனு தொடர்பாக தங்கள் கருத்தை நீதிபதிகள் இன்று தெரிவித்தனர். தலைமை நீதிபதி தொடர்பான வழக்கு என்பதால் அதனை நேரடியாக விசாரணை செய்ய முடியாது எனவும், 5 நீதிபதிகளுக்கு மேற்பட்ட அமர்வு மட்டுமே முடிவு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக கபில் சிபல் தெரிவித்தார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...