நிஃபா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

மே 22, 2018 1455

கடந்த இரண்டு தினங்களாக கேரளாவை அச்சுறுத்திலக் கொண்டு இருப்பது நிஃபா வைரஸ்தான்.

நிபா வைரஸ், 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள ஒரு கிராமத்தில், மக்கள் தொடர்ச்சியாக காய்ச்சலினால் உயிரிழந்து வந்தனர். அவர்களின் ரத்தத்தைச் சோதனைசெய்து பார்த்தபோதுதான், இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆரம்பம்குறித்து ஆராய்ந்துபார்த்தபோது, பன்றிகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது தெரியவந்தது. பன்றிகளை எப்படி இந்த வைரஸ் தாக்கியது என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது வௌவால்.

ஆம், பழந்தின்னி வௌவால்களின் சிறுநீரகம், உமிழ்நீர், முகம் போன்ற இடங்களில்தான் இந்த வைரஸ் உருவாகிறது. இந்த வௌவால்கள் கடித்த பழங்களை விலங்குகள் உண்ணும்போதும், அவற்றின் சிறுநீர் மற்றும் உமிழ்நீர் விலங்குகள்மீது படுவதன் மூலமும் இது தொற்றிக்கொள்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட வீட்டு விலங்குகளுடன் மனிதர்கள் பழகும்போது, அவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. பன்றி தவிர, வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய், குதிரை ஆகியவை மூலமும் இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வௌவால்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழக்கூடியவை. அதன்படி, உயரமான பனை மரங்களில் கள்ளுக்காகக் கட்டப்படும் பானைகளில் வௌவால்களின் உமிழ்நீர் மற்றும் சிறுநீர் பட்டு, அந்தக் கள்ளை மனிதர்கள் குடிக்கும் போது விரைவில் பரவிவிடும்.

லேசான காய்ச்சலுடன் நிபா வைரஸ் அறிகுறிகள் தொடங்குகிறது. பிறகு, தொடர் தலைவலி, உடல் சோர்வு, மனச் சோர்வு ஆகியவற்றைக் கடந்து, கோமா நிலையை அடைகிறது. கோமாவிலிருந்து மீண்டெழுந்தவர்களின் கதை பல உண்டு. ஆனால், இந்த வைரஸ் தாக்கி கோமாவுக்குச் சென்றவர்கள், இறுதியில் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். இதற்கு இன்னும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே தற்போது மருந்துகள் உள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதே சிறந்த மருந்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சற்று தூரத்திலேயே இருக்க வேண்டும், அவர்கள் உண்ட உணவின் மீதியை மற்றவர்கள் சாப்பிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் இருமல், சளி போன்றவை நம் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணிகளைப் பிறர் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது. இதுவரை இந்த வைரஸ் தாக்கியவர்களில் 75 சதவிகிதத்தினர் இறந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...