கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது துப்பாகிச் சூடு!

ஜூன் 11, 2018 640

கோராக்பூர் (11 ஜூன் 2018): உத்திர பிரதேசம் மாநிலத்தில் டாக்டர் கஃபீல் கான் சகோதரர் காசிஃப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்த நிலையில் தன் சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய டாக்டர் கஃபீல் கான், சகோதரர் காசிஃப் (34) நேற்று இரவு 11 மணிக்கு கோராக்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் காசிஃபை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்த காசிஃப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அறுவை சிகிச்சை மூலம் அவரது கழுத்தில் இருந்த புல்லட் நீக்கப்பட்டது. பின்பு அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை காசிஃப் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஏற்கனவே டாக்டர் கஃபீல்கான் குடும்பத்திற்கு உ.பி அரசிடமிருந்து மிரட்டல் இருந்து வந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

கடந்த வருடம் கோராக்பூர் மருத்துவமனையில் அரசின் அலட்சியப் போக்கால் ஆக்சிஜன் இன்றி குழந்தைகள் இறந்துபோன நிலையில் டாக்டர் கஃபீல்கான் அவசர ஆக்சிஜன் தேவையை உணர்ந்து தன் சொந்த செலவில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளைக் காப்பாற்றி பொதுமக்களின் மனதில் ஹீரோவாக இடம் பிடித்தார். ஆனா இதனை பிடிக்காத யோகி அரசு கஃபீல்கான் மீது குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்தது. சுமார் 8 மாத சிறைவாசத்திற்குப் பிறகு நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்திற்கு குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் குடும்பத்திற்கு பாஜக அரசு அளிக்கும் பரிசு இதுதான் என்றும் நன்றி பிரதமரே. அச்சே தீன் வந்துவிட்டது என்றும் ஜிக்னேஷ் மேவானி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...