வியாபம் ஊழலை விசாரித்து வந்த அதிகாரி திடீர் மரணம்!

ஜூன் 12, 2018 549

போபால் (12 ஜூன் 2018): மத்தியபிரதேசத்தில் வியாபம் ஊழலை விசாரித்த ஐ.பி ஆய்வாளர் அஜய் குமார் வாகனம் மோதி கொல்லப் பட்டுள்ளார்.

தொழில்முறைக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கும், அரசு வேலையில் சேர்வோருக்கும் தகுதித் தேர்வு நடத்துவதுதான் 'வியாபம்' நிறுவனத்தின் பிரதான பணியாகும். இந்நிலையில், தகுதித் தேர்வை எழுத விரும்பாதவர்கள் லஞ்சம் கொடுத்து கல்லூரிகளில் அல்லது அரசு வேலைகளில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3ல் 2 பேர் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் ஆவர். 70 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் ஆவர். இதுதவிர இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் மற்றும் சாட்சிகள் சுமார் 50 பேர் மர்மமான முறையில் கொல்லப் பட்டனர்.

இந்நிலையில் வியாபம் ஊழலை விசாரித்து வந்த ஐ.பி ஆய்வாளர் அஜய் குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது கருப்பு நிற கார் ஒன்று வேகமாக மோதியதில் படுகாயமடைந்த அஜய் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வியாபம் ஊழலில் சாட்சிகள் மற்றும் அதிகாரிகள் என படுகொலை செய்யப்பட்டவர்களில் 51வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வியாபம் ஊழலை விசாரித்த உளவுத்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...