கவுரி லங்கேஷை கொலை செய்தது ஏன்? - குற்றவாளி வாக்குமூலம்!

ஜூன் 16, 2018 682

பெங்களூரு (16 ஜூன் 2018): எழுத்தாளர் கவுரி லங்கேஷை சுட்டுப் படுகொலை செய்ததை ஒப்புக்கொண்ட பரசுராம் வாக்மோர் அதற்கான காரணத்தையும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கடந்த வருடம் செப்டம்பர் 5ம் தேதி தன் வீட்டு வாசலில், சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் பரசுராம் என்பவரை புலனாய்வு குழு கைது செய்திருக்கிறது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் விஜய்ப்பூரா மாவட்டம் சின்டாகி என்ற ஊரை சேர்ந்த பரசுராம், தான் பெங்களூருக்கு செப்டெம்பர் 3, 2017 அன்று அழைத்து வரப்பட்டதாகவும், அதற்கு முன் தனக்கு ஏர் பிஸ்டலில் பெல்காவி மாவட்டத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தான் யாரை கொலை செய்யப் போகிறோம் என்று சம்பவத்தன்று தனக்கு தெரியாது என்றும், தன் மதத்தை காப்பதற்காகவே கொலை செய்தேன் என்றும் கூறியிருக்கிறார். இச்செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவின் துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வரா, இதை மறுத்துள்ளார். "கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் நிறைய விஷயங்கள் பத்திரிகையில் வெளிவருகின்றன. என்னால் எதையும் தற்சமயம் கூற முடியாது. அது நடந்து கொண்டிருக்கும் விசாரணையை பாதிக்கும்" என அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்துறை பரமேஸ்வராவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சிறப்பு புலனாய்வு குழு ஆறு பேரை கைது செய்திருக்கிறது. பரசுராம் வாக்மோர், கே டி நவீன் (எ) ஹோட்டே மாஞ்சா, அமோல் காலே, மனோகர் எட்வீஸ், சுஜீத் குமார் (எ) பிரவீன் மற்றும் அமீத் தேவேத்கர் ஆகியோர் இதில் அடங்குவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...