வாழ்த்துக்கள் அமித் ஷா ஜி - அமித்ஷாவை சீண்டியுள்ள ராகுல் காந்தி!

ஜூன் 23, 2018 808

புதுடெல்லி (23 ஜூன் 2018): பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள கூட்டுரவு வங்கியில் கோடிக்கணக்கான பணம் டெபாசிட் செய்யப் பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று ரூ.1000, 500 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாள்களில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், ரூ.745 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அமித் ஷாவை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், `வாழ்த்துக்கள் அமித் ஷா ஜி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றுவதில், நீங்கள் தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐந்து நாள்களில் ரூ. 750 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. உங்களின் சாதனைக்கு சல்யூட்' எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன், `பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அதிகமாகப் பெற்ற வங்கியின் இயக்குநர், பணமதிப்பிழப்பின் மூலம் 81 சதவிகிதம் வருமான உயர்வாகப் பெற்ற கட்சியின் தலைவர்' என்று அமித் ஷாவை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...