குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை!

June 25, 2018

ஆமதாபாத் (25 ஜூன் 2018): 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 95 முஸ்லிம்கள் கொலை செய்யப் பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் 60 ஹிந்து யாத்ரிகர்கள் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் 2005-ம் ஆண்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கையில், ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்றும், ஒரு ரயில் பெட்டியில் சமையல் செய்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதல் காரணமாக நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அகமதாபாதின் நரோதா பாடியா பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. 62 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த மூன்று பேரையும் விடுவித்திருந்தது. பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கியை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சருமான மாயா கோட்னானியை ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.

இந்நிலையில் இந்ந்த வழக்கில் உமேஷ் பர்வாட், பஞ்சேந்திர சிங் ராஜ்புத் மற்றும் ராஜ்முகார் செளமல் ஆகியோரை முக்கிய குற்றவாளிகளாக அறிவித்த குஜராத் உயர் நீதிமன்றம் மூவருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Search!