பா.ஜ.கவின் ஆட்சியில் வறுமையும் பயமும் - பாப்புலர் ஃப்ரெண்ட்!

ஜூன் 27, 2018 688

புதுடெல்லி (27 ஜூன் 2018): பா.ஜ.க-வின் நான்கு வருட ஆட்சி இந்தியாவில் கொடிய வறுமையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது: பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நரேந்திர மோடி தலைமையிலான நான்கு வருட பாஜக ஆட்சியில் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் மேலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் தேசத்தின் பொருளாதாரம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் GST போன்ற பொருளாதார நடவடிக்கைகள் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. எரிபொருள் மற்றும் அணைத்து அடிப்படை பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது சாதாரண குடிமக்களுடைய வாழ்க்கையை மேலும் சிரமமாக்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு வெறும் ஐந்து நாட்களில் 745.58 கோடி ருபாய் மதிப்புள்ள பணப்பரிமாற்றம் பாஜக தலைவர் அமித் ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கியில் நடைபெற்றுள்ளது என்பது மிக அபாயகரமான குற்றச்சாட்டாகும். அரசுடைய நிர்வாக மற்றும் பொருளாதார தோல்விகள் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால், மக்களுடைய கவனத்தை திசை திருப்ப தற்போது பாஜக வகுப்புவாத பிரிவினையை உருவாக்க முயற்சிக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தல்களை சந்திக்க அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி இதுவாகும். சமத்துவம் மற்றும் சமூக நீதியுடனான மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இந்தியா செழித்து வளர, இத்தகைய சக்திகள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தேசத்துடைய மிகப்பெரிய நன்மைக்காக தேசத்தில் இருக்கும் மதச்சார்பற்ற சக்திகள் அவர்களுடைய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கவேண்டும் மேலும் மக்கள் விரோத மற்றும் மதவாத அரசாங்கத்திலிருந்து தேசத்தை பாதுகாக்க வரவிருக்கும் தேர்தல்களை மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்த செயல் திட்டத்துடன் சந்திக்க முன் வரவேண்டும்.

மேலும் பசு தீவிரவாத பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மத வெறிபிடித்த குண்டர்களுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்துடைய அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்குவதில் மத்திய மாநில அரசுகள் தோல்வியை சந்தித்துள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் குறிப்பிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் அடித்து படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட தேசத்தின் பல்வேறு பகுதிகளில் அடித்து படுகொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்களுடைய அராஜகங்கள் இன்னமும் அதிகரித்து கொண்டிருப்பதை காட்டுகின்றது. ஒரு கும்பலால் எந்நேரத்திலும் ஒரு முஸ்லிமுடைய உயிர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட முடியும் மேலும் இலகுவாக குற்றவாளிகள் தப்பிக்க முடியும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக குண்டர்களுக்கு உதவி செய்வதில் மாநில காவல் துறை ஈடுபட்டுள்ளது என்பதை உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து வெளிவரும் சமீபத்திய புகைப்படங்கள் காட்டுகின்றது. அஸ்ஸாம், ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெறும் பதினைந்து நாட்களுக்குள் மூன்று வெவ்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. வெற்று வாய் வார்த்தை ஜாலங்களை நிறுத்திவிட்டு உபி, ஜார்கண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உள்ள தனது கட்சி முதலமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கூட்டம் பிரதமரை வலியுறுத்தியுள்ளது.

மேலும் மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் எதிரிகள் மீது UAPA மற்றும் NSA போன்ற அடக்குமுறை சட்டங்களை தாரளமாக பயன்படுத்தப்படுவதை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுக்கும் இத்தகைய அடக்குமுறை சட்டங்கள் அமலில் இருப்பதை குறித்தும் எதிர்ப்பு குரலை ஒடுக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை தவறாக பயன்படுத்த சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதை குறித்தும் கடந்த காலங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் தேசிய அளவில் பலமுறை எச்சரித்துள்ளார்கள். தற்போது அது தான் தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்து செயற்பாட்டாளர்கள் பீமா கொரிகோன் வன்முறையோடு தொடர்புபடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டது என்பது அச்சுறுத்தும் போக்கின் சமீபத்திய உதாரணமாகும். இக்கைது நடவடிக்கைக்கு பிறகு, காவல் துறை முரண்பட்ட கதைகளோடு வந்து அவர்கள் மீது UAPA சட்டங்களை விதித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சமூகத்திலிருக்கும் பின்தங்கிய பிரிவினர்களுக்கு எதிராக நடைபெறும் அரச வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள் என்பதையும் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் அனைவரும் நன்கு அறிவார்கள். பீமா கொரிகோன் நினைவு நாளில் வன்முறையை உருவாக்கியவர்களும் பாரத் பந்த் நடைபெற்ற தினத்தில் தலித்துகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வீடியோவில் பிடிபட்டவர்களும் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் தகுந்த காரணமின்றி நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மேலும் அவர் மீது NSA தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அதே போன்று தமிழ்நாட்டில் தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது வழக்கும், மனம்போன போக்கில் கைது செய்வதும், கண்மூடித்தனமாக தேச விரோத குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. கடுமையான உரிமை மீறல்கள் மற்றும் அரச அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் இத்தகைய மோசமான சூழல்கள் தேசம் தழுவிய வலுவான மனித உரிமை அமைப்பு உருவாவதற்கான அழைப்பை விடுத்துள்ளது என்று அந்த கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் அஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தேசிய துணை தலைவர் O.M.A சலாம், தேசிய பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் K.M ஷெரீஃப், A.S இஸ்மாயில், அஷ்ரஃப் பாகவி, M.அப்துல் சமத், A.சயீத், M.முஹம்மது இஸ்மாயில், முஹம்மத் சாகிப், P.N ரோஷன், யா மொய்தீன், வழக்கறிஞர் முஹம்மது யூசுப் மற்றும் E.M அப்துல் ரஹ்மான் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...