முஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் இந்து குடும்பத்தினருக்கு தொடர் மிரட்டல்!

ஜூன் 30, 2018 735

ஐதராபாத் (30 ஜூன் 2018): ஐதராபாத்தில் முஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து கடந்த 11 வருடங்களாக வளர்த்து வரும் இந்து குடும்பத்தினருக்கு இரு மதத்தினரும் தொடர் மிரட்டல் விடுப்பதாக இந்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஹைதராபாத் நகரில் (தற்போதைய தெலுங்கானா மாநிலம்) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர், 25.8.2007 அன்று, கோகுல் சாட் எனும் இடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது, ஒரு மூலையில் 3 வயது சிறுமி பயத்தில் அழுது கொண்டிருந்தாள். அப்போது, பாப்பாலால் எனும் பெயிண்டர் ஓடி சென்று பார்த்துள்ளார். அனைவரும் பயத்தில் அலறி அடித்து கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் உயிருக்காக போராடிக்கொண்டிருந்துள்ளனர். சிலரது உடல்கள் சிதறி இருந்தன. அந்த பகுதியே ஒரு போர்களம் போல் காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், ஒரு மூலையில் பயத்தில் உறைந்து போய் அழுதுக் கொண்டிருந்த அந்த 3 வயது சிறுமியை கண்ட பாப்பாலால், இது யாருடைய குழந்தையோ என எண்ணி, நிதானமாக அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது, அந்த சிறுமி, தனது தந்தையின் பெயர் பஷீர் என்றும், தாயின் பெயர் பாத்திமா பேகம் என கூறினாள். பின்னர் அந்த போர்களமாக காட்சியளித்த இடத்தில், போலீஸாரின் கெடுபிடிகளுக்கிடையே அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு, பாப்பாலால் அந்த சிறுமியின் பெற்றோரை பல இடங்களில் தேடினார்.

ஆனால், எங்கும் கிடைக்காததால், உடனே அருகே இருந்த ஒரு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இது குறித்து புகார் அளித்துள்ளார். யாராவது குழந்தையை காணவில்லை என புகார் அளித்தால், என்னை அனுகவும் என கூறி தனது முகவரியையும் பாப்பாலால் போலீஸ் நிலையத்தில் கொடுத்தார். அதன் பின்னர், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அப்போது, பாப்பாலாலின் மனைவியான ஜெயஸ்ரீ, தனது கணவர் ஒரு சிறுமியுடன் வருவதை கண்டு ஆச்சர்யமடைந்தார். பின்னர், நடந்தவற்றை அறிந்து, அந்த சிறுமியை ஆசையோடு அணைத்து கொண்டு, அவரை வளர்த்து வந்தார். பின்னர் அந்த சிறுமியின் பெயர் சானியா பாத்திமா என்பதும் தெரியவந்தது. பாப்பாலால், ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால், சானியா பாத்திமாவை தங்களது குழந்தையாக வளர்த்தனர். இது வரை அந்த குழந்தையை இவர்கள் ’பாப்பா’ என்றே அழைக்கின்றனர். பெயர் மாற்றம் கூட செய்யவில்லை. சானியா பாத்திமாவும் இவர்களை தங்களது பெற்றோர் போன்றே பாவித்து பாசமாக வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு பின்னர், பாப்பாலால் தம்பதியினருக்கு குழந்தை பேறு உண்டானது. இவர்களுக்கு தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர். ஆயினும் சானியா பாத்திமா வீட்டிற்கு வந்த நேரம்தான் தங்களுக்கு கடவுள் பிள்ளை பாக்கியத்தை கொடுத்ததாக பூரிப்புடன் கூறுகின்றனர் இந்த தம்பதியினர்.

ஆனால், சானியா பாத்திமாவை இவர்கள் வளர்த்து வருவது, இவர்களின் உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள சில முஸ்லிம் மதத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதனால் கடந்த 11 ஆண்டுகளாக சானியா பாத்திமாவை ஏதாவது ஒரு அரசு அனாதை விடுதியில் விட்டு விடுமாறு இரு தரப்பு மதத்தினரும் பாப்பாலால் தம்பதியினரை வலியுறுத்தி வருகின்றனர். சானியா படிக்கும் பள்ளிக்கே சென்று சில முஸ்லிம் இனத்தவர்கள் அவரை அனாதை விடுதியில் சேருமாறு எச்சரித்தும் உள்ளனர். ஆனால் இதனை சானியா மறுத்து விட்டார். பாப்பாலால் இதனை எதுவும் காதில் வாங்காமல் சானியா பாத்திமாவை தனது மகள் போன்று படிக்க வைத்து வருவதை கண்ட, அப்பகுதியை சேர்ந்த சில முஸ்லிம் மதத்தவர்கள், கடந்த சில நாட்கள் முன் பாப்பாலால் வீட்டிற்கே சென்று எச்சரித்துள்ளனர். ஒரு இந்து வீட்டில் எப்படி முஸ்லிம் பெண் வளரலாம். வளர்ந்த பின்னர் இந்த பெண்ணை ஒரு இந்துவிற்கு தான் திருமணம் செய்து கொடுப்பாய். ஆதலால், இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என மிரட்டியுள்ளனர். மேலும் இதனால் பலமுறை தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பாப்பாலால் சானியா பாத்திமாவை தனது மகள் போல் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஹைதராபாத் பாத்த பஸ்தி பகுதி காவல் நிலையத்தில் பாப்பாலால், அவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் சானியா பாத்திமா ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாப்பாலால் பேசியதாவது: “மனிதாபிமானம் தான் ஒரு மனிதனுக்கு முக்கியம். அதன் பிறகுதான் ஜாதி, மதம், பேதமெல்லாம். ஆனால், தற்போது மனிதனுக்கு அடிப்படை குணமான மனிதாபிமானம் குறைந்து போய் விட்டது. நான் ஒரு பயங்கரமான சூழலில் அழுதுக் கொண்டிருந்த ஒரு 3 வயது குழந்தையை காப்பாற்றினேன். அப்போது நான் அந்த குழந்தை எந்த மதம், என்ன இனம், என்ன ஜாதி என்பதை எல்லாம் பார்க்கவில்லை. இதுகுறித்து அப்போதே போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்தேன்.

ஆனால், இதுவரை அந்த சிறுமியை தேடி யாரும் வரவில்லை. எனக்கும் குழந்தைகள் இல்லை என்பதால், அந்த குழந்தையையே நான் என் குழந்தையாக வளர்த்து வருகிறேன். எனக்கு இப்போது 2 குழந்தைகளை கடவுள் கொடுத்துள்ளார். ஆயினும் நான் சானியாவை ஒரு அனாதை விடுதியில் விட மனமில்லை. ஆனால், என்னை இந்த இரு மதத்தினரும் கடந்த 11 ஆண்டுகளாக டார்ச்சர் செய்து வருகின்றனர். சானியாவை அனாதை விடுதியில் விட்டு விடுமாறு முஸ்லிம் இன பெரியவர்கள் கூட என்னை எச்சரித்தனர். சில நாட்களுக்கு முன் ஒரு முஸ்லிம் கும்பல் என்னை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்தது. ஆனால், நான் அதிருஷ்டவசமாக பிழைத்துக் கொண்டேன். எங்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். சானியா ஃபாத்திமா முஸ்லிமாக வளர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் சானியாவை எந்த அனாதை விடுதியிலும் விட மாட்டோம். இதனால் எங்கள் உயிரே போனாலம் சரி” இவ்வாறு பாப்பாலால் கண்ணீர் மல்க கூறினார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...