இணைய தள மோசடி செய்தவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது!

July 04, 2018

ஐதராபாத் (04 ஜூலை 2018): போலி இணையதளம் மூலம் நிதி மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த விக்ரம் (26) என்பவர் ஷாதி டாட் காம் என்ற திருமண தகவல் இணையதளத்தில் போலிக்கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். இதன்மூலம் பெண் ஒருவரை அவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகிய விக்ரம் தனது தாயின் மருத்துவ செலவிற்காக அவசரமாக ரூ. 6,67,000 வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பெண்ணும் அவர் மீதிருந்த நம்பிக்கையினால் வங்கி மூலம் அவர் கேட்ட பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளார். ஆனால் அதன்பின் விக்ரம், அந்தப் பெண்ணை தொடர்பு கொள்ளவில்லை. அவரது ஃபோனும் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், விக்ரமிடம் நடத்திய விசாரணையில் 2014-ஆம் ஆண்டு சவுந்தர்யா என்பவரை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவில் குடியேறியதும், தற்போது இந்தியா வந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இதேபோன்று வேறு யாரையாவது ஏமாற்றி அவர் பணம் பறித்துள்ளாரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்ரம் அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் அவரை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!