ட்விட்டரில் ஒரே நாளில் மூன்று லட்சம் ஃபாலோவர்களை இழந்தார் மோடி!

ஜூலை 13, 2018 604

புதுடெல்லி (13 ஜூலை 2018): ட்விட்டரில் ஒரே நாளில் மூன்று லட்சம் ஃபாலோவர்களை பிரதமர் மோடி இழந்துள்ளார்.

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமான சித்தரிப்பும் செய்யப்படுகிறது.

இதுபோன்ற கருத்துகளும், சித்தரிப்பும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இது, உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதைதொடர்ந்து, சர்ச்சைக்குரியதும் பெரும்பாலானவர்களால் விரும்பத்தகாததுமான கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் தீர்மானித்தது.

இந்த நடவடிக்கையின் விளைவாக பல நாடுகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், இதர துறைகளை சேர்ந்த நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் லட்சக்கணக்கான அபிமானிகளை இழந்துள்ளனர்.

குறிப்பாக, சமீபத்தில் வெளியான செய்தியின்படி டுவிட்டரில் 4 கோடியே 34 லட்சம் அபிமானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய அளவில் மூன்றாம் இடத்தில் இருந்தார். ஆனால், இன்று 2 லட்சத்து 84 ஆயிரத்து 746 அபிமானிகளை அவர் இழந்துள்ளார். இதேபோல் ராகுல் காந்தியும் சுமார் 17 ஆயிரம் அபிமானிகளை இழந்தார்.

பிரதமர் மோடி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கமும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அபிமானிகளை இழந்தது. காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுமார் ஒன்றரை லட்சம் பேரை இழந்துள்ளார். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சுமார் 74 ஆயிரம் அபிமானிகளையும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 91 ஆயிரத்து 555 அபிமானிகளையும், அமித் ஷா 33,363 அபிமானிகளையும் இழந்தனர்.

இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சுமார் 4 லட்சம் அபிமானிகளையும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் 3 லட்சம் அபிமானிகளையும் இழந்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...