காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

ஜூலை 19, 2018 1382

புதுடெல்லி (19 ஜூலை 2018): காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவையில் மகாத்மா காந்தி அவர்களின் 150-வது பிறந்த நாளினை வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு கொண்டாடப்பட உள்ளதாகவும், இதையொட்டி சிறைக் கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்தி குரிப்பில், "மகாத்மா காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வயதான சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி தண்டனை காலத்தில் பாதி காலத்தினை முடித்த 55 வயதுக்கு மேற்பட்ட பெண், திருநங்கை கைதிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இதன்படி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி, 2019-ம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி, 2019 அக்டோபர் 2-ஆம் தேதி என 3 கட்டங்களாக தகுதி உடைய கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.

மரண தண்டனை பெற்றவர்கள், மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் எனவும், பொடா சட்டம், சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம், தீவிரவாத தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...