உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்டிபிஐ வரவேற்பு!

ஜூலை 21, 2018 491

புதுடெல்லி (21 ஜூலை 2018): பசுவின் பெயரால் அடித்துக் கொல்வதை தனிக் குற்றமாக்கி சட்டமியற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை எஸ்டிபிஆஐ வரவேற்றுள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“சிறுபான்மை முஸ்லிம் சமூகமும், விளிம்புநிலை தலித் சமூகமும் பல ஆண்டுகளாக இந்துத்துவா பாசிச குழுக்களால் தேசம் முழுவதும் அச்சுறுத்தலை சந்தித்து வருவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. மதக் கலவரத்தின் போதும், பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் இந்துத்துவா குண்டர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வந்து சுதந்திரமாக இருந்து வருகிறார்கள். அந்த மாதிரி நேரங்களில் சங்பரிவார் குண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஒன்று காவல்துறையினர் கண்களை மூடிக் கொள்கிறார்கள் அல்லது அரசியல் செல்வாக்கிற்கு அடிபணிந்து போகிறார்கள்.

கட்டுக்கடங்காத கொலை வெறிக்கும்பல், துவேச அரசியலால் உந்தித்தள்ளப்பட்டு நடத்தி வந்த அடித்துக் கொல்லும் குற்றங்கள், ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற முதல் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில், நமது நாட்டின் மதச்சார்பற்ற மரபையும், பன்முகத்தன்மை வாய்ந்த சமூக கட்டமைப்பையும், சட்டம் ஒழுங்கால் பாதுகாக்கப்படும் ஜனநாயக நடைமுறையில், சட்டத்தைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்.

குழப்பமான மற்றும் எதேச்சதிகாரம் செயல்படும்போது அரசு சிறப்பாக செயல்பட்டு, அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கி இருக்கும் உறுதிமொழிகளை பாதுகாப்பது அவசியமாகும். இந்த நாட்டின் சட்டத்தை வன்முறை கும்பல் காலில் போட்டு மிதிப்பதை அனுமதிக்க முடியாது. வளர்ந்து வரும் வன்முறைக்கு எதிராக அரசு கேளா காதினராக இருக்க முடியாது. உட்ரோ வில்சன் கூறியிருப்பதுபோல மக்களின் குரலுக்கேற்ப அரசு ஓசை எழுப்ப வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய எல்லோரையும் கட்டித்தழுவக்கூடிய சமூக நெறிமுறைக்கான ஒரு முழக்க அழைப்பை விடுப்பது தற்போதைய கால கட்ட தேவையாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மேல் நம்பிக்கையை வளர்க்க அதுவே வழி. இதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நாம் எதிர்பார்க்கவில்லை.

இதற்கு முன்னால் இந்த நீதிமன்றத்தில் நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளோடு, அடித்துக் கொல்லும் குற்றத்தை தனி குற்றமாக்கி, அதற்குத் தேவையான தண்டனையை வழங்கும் வகையில் பாராளுமன்றம் செயல்பட நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதற்காக ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றி, அந்த மாதிரி வன்முறையில் ஈடுபடும் நபர்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்த வேண்டும். சட்டத்தால் ஏற்படும் அச்சம், சட்ட நடவடிக்கை கொடுக்கும் நடுக்கம் ஆகியவைதான் மேம்பட்ட சமூக அமைப்புக்கு அடிப்படையாக அமையும் என்று நீதியரசர்கள் கூறியிருக்கிறார்கள்.

பசு பாதுகாப்பு குண்டர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது. இது நல்ல செய்தியாகும். குரலற்ற மக்கள் மத்தியில் ஏற்பட்ட நீண்ட கால ரணம் மற்றும் தடையில்லாமல் ஆட்டம் போடும் கும்பல்களுக்கு எதிராக இந்த தீர்ப்பு வகை செய்யும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கருதுகிறது.”

மேற்கண்டவாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...