பகுதி நேரத்தில் மீன் வியாபாரம் செய்யும் கல்லூரி மாணவி ஹனான் - வீடியோ

ஜூலை 27, 2018 956

கொச்சி (27 ஜூலை 2018): தன் வீட்டுச் செலவுக்காக கல்லூரி நேரம் போக மாலையில் மீன் வியாபாரம் செய்து பொருளீட்டும் கல்லூரி மாணவி ஹனான் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளார்.

கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனான். 21 வயது கல்லூரி மாணவியான ஹனான், கல்லூரி நேரம் போக மீதி உள்ள நேரங்களில் மீன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். கல்லூரி சீருடையில் அவர் இவ்வாறு செய்யும் தொழில் பேசு பொருளாகியுள்ளது.

இள வயதிலேயே தந்தையால் கைவிடப் பட்ட தாயுடன் வாழும் ஹனானுக்கு ஒரு தம்பியும் உண்டு. இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாகவும் கல்வியின் முக்கியத்துவம் காரணமாகவும் கல்லூரியில் படித்துக் கொண்டு வீதி வீதியாக சைக்கிளில் சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் சிலர் தவறாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் ஹனானை விமர்சிப்பவர்களுக்கு கேரள அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலருக்கு முன்னுதாரணமாக திகழும் மாணவியை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளார். மேலும் சிலர் ஹனானுக்கு உதவ முன் வந்துள்ளனர். ஆனால் அந்த உதவிகளை உதறித் தள்ளியுள்ள ஹனான், என்னை தனியாக விடுங்கள் நான் பிழைத்துக் கொள்வேன். எங்களை அனாதையாக்கி என் தந்தை எங்களை விட்டு போனது போல வேறு யாரும் செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...