மாணவி ஹனான் ஹமீதை தரக்குறைவாக விமர்சித்தவர் கைது!

ஜூலை 29, 2018 949

திருவனந்தபுரம் (29 ஜூலை 2018): கேரள மாணவி ஹனான் ஹமீதை சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கேரள மாநிலம், தொடுப்புழா என்ற இடத்தில் உள்ள அல் அசார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருபவர் மாணவி ஹனன் (வயது 19). இவர், குடிகார தந்தை குடும்பத்தை கைவிட்டுச்சென்ற நிலையில், தாயாருக்கு மனநிலை சரியில்லை என்ற சூழலில், தினமும் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வந்து விற்று, அதைக் கொண்டு தன்னையும், தாயாரையும், சகோதரரையும் காத்துக்கொண்டு படித்து வருவதாக தெரிகிறது.

மாணவி ஹனனைப் பற்றி பிரபல பத்திரிகை ஒன்றில் சிறப்புக்கட்டுரை வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது. அதைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடிக்க உள்ள படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்து உள்ளது. இந்த வாய்ப்பை டைரக்டர் அருண் கோபி வழங்கி உள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்களும், பட உலகினரும் அவருக்கு உதவ முன் வந்தனர்.

இது குறித்து அறிந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டனர். ஒரு தரப்பினர், ஹனனைப் பாராட்டினர்.

இன்னொரு தரப்பினரோ மாணவி ஹனனை கடுமையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்தனர். குறிப்பாக “ஹனன் வசதியானவர், சினிமாவில் நடிப்பதற்காகத்தான் மீன் விற்பதாக நாடகம் ஆடுகிறார்” என்ற ரீதியில் கருத்துக்கள் வெளியானது. இது அந்த மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

இது குறித்து ஹனன் பேட்டி அளிக்கையில், “நான் பொய் பேசுவதாக சொல்கிறார்கள். இது தவறு. நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்தான். வாழ்க்கை நடத்துவதற்கு போராடி வருகிறேன். 7 வயதிலேயே எனக்கு கஷ்டங்கள் ஆரம்பித்து விட்டது. எல்லா பகுதி நேர வேலைகளும் செய்து இருக்கிறேன்” என உருக்கமுடன் கூறினார். இதை அந்த மாணவி படித்து வரும் கல்லூரி நிர்வாகமும் உறுதி செய்தது.

ஹனனுக்கு எதிரான விமர்சனங்களுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

ஹனனை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். அது மட்டுமின்றி அந்த மாணவி மீன் விற்கும் படத்தை தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த மாணவியை தரக்குறைவாக விமர்சித்த வயநாடு பகுதியை சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...