காவேரி மருத்துவ மனை முன்பு விடிய விடிய விழித்திருந்த திமுக தொண்டர்கள்!

ஆகஸ்ட் 07, 2018 477

சென்னை (07 ஆக 2018): சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் நேற்றிரவு 6.30 மணி அளவில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் பரவியதால், மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். இதை கேள்விபட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் குவியத் தொடங்கினர். அவர்கள், ‘‘எழுந்து வா தலைவா எழுந்து வா, கழகத்தை காக்க எழுந்து வா.. என்று விண்ணை அதிர வைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இதனால், மருத்துவமனை முன்பு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று இரவு 6.30 மணியளவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயது மூப்பின் அடிப்படையில் கணக்கிடும் போது முக்கிய உறுப்புகளை பராமரிப்பதில் சவாலான நிலை தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்தே கணிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...