கேரளாவுக்கு ரூ 500 கோடி இடைக்கால நிதி - பிரதமர் அறிவிப்பு!

ஆகஸ்ட் 18, 2018 465

திருவனந்தபுரம் (18 ஆக 2018): கேரளா வெள்ள பாதிப்புக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரணமாக அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, பல்வேறு மாநிலங்களும் நிதியுதவி அறிவித்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்குவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் 38 சின்டெக்ஸ் டேங்குகள் மூலம், திருவனந்தபுரத்திற்கு சரக்கு ரயிலில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இதேபோன்று ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தெலுங்கானா சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

இதேபோல் ஆந்திரா, டெல்லி மாநில அரசுகள் தலா 10 கோடி ரூபாய் நிதி அறிவித்துள்ளன. பஞ்சாப் மாநில அரசு 5 கோடி ரூபாய் ரொக்கமும், 5 கோடி மதிப்பிலான பொருட்களையும் அனுப்பியுள்ளது. பீகார் அரசு சார்பில் 10 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல கோலிவுட் நடிகர்கள் சார்பாகவும் பல லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...