கேரள வெள்ளமும் தத்தளித்த பிரபலங்களும்!

ஆகஸ்ட் 19, 2018 582

திருவனந்தபுரம் (19 ஆக 2018): கேரளாவின் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பல திரை பிரபலங்களும் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கேரளாவில் வரலாறு காணாத வகையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த 8-ம் தேதியிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள 80 அணைகள் நிரம்பி வழிகின்றன. கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 -ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 3,14,391 பேர் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2094 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், முப்படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீரில் தத்தளிக்கும் கேரளாவில் சினிமா பிரபலங்களின் வீடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நடிகர் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் நிலச்சரிவில் சிக்கி, பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருக்கும் நடிகர் பிருதிவ்ராஜின் வீடு வெள்ளத்தால் மூழ்கியது. அவரது தாயார் மல்லிகா சுகுமாறனை மிதவை மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் நடிகை அனன்யாவும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ``எங்கள் வீடு முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குத்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம். நாங்கள் இப்போது நடிகை ஆஷா ஷரத்தின் இல்லத்தில் இருக்கிறோம். அவர் எங்களை வீட்டுக்கு அழைத்தார். கடந்த இரண்டு நாட்களாக மோசமான நிலையில் இருந்தோம். வெள்ளம் திடீரென உயர்ந்ததால் எங்களது உறவினர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...