கேரள வெள்ளத்தில் மீண்டும் நிரூபித்த மதங்களை வென்ற மனித நேயம்!

ஆகஸ்ட் 22, 2018 977

ஆலப்புழா (22 ஆக 2018): கேரள வெள்ளத்தில் மதங்களை தாண்டிய மனித நேயம் மீண்டும் நிரூபித்துள்ளது.

சாதி, இனம், மதம், என்னும் கட்டமைப்புக்குள் இந்தியா இப்படி தன்னை புகுத்தி கொண்டுவிட்டதே, எப்போது அனைத்தையும் உடைத்துக் கொண்டு வெளியே வருமோ, எப்போது சகோதரத்துவம் நிலவும் வருமோ என்று பொருமிக் கொண்டும் ஏங்கி கொண்டும் இருந்தோம். இதோ அதனை மெய்ப்பிக்க ஒரு சம்பவம் நடந்து விட்டது. அந்த சம்பவத்துக்கும் காரணம் கேரள வெள்ளம்தான்.

மீட்பு பணிகளை செய்வதற்கென்றே ராணுவம் உள்ளது, பேரிடர் மீட்பு குழு உள்ளது, தீயணைப்பு வீரர்கள் உள்ளனர், ஏன் தன்னார்வ அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும்கூட உள்ளன. இவையெல்லாம் பொதுவான கண்ணோட்டத்தைதான் தந்திருக்கின்றன. ஆனால் சில இளைஞர்கள் வெள்ள பணிகளை சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளனர். இது ஒன்றும் புதிது அல்லதான். ஆனால் இவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள்தான் என்பதுதான் சிறப்பு. அதைவிட சிறப்பு இவர்கள் சுத்தம் செய்த இடம் ஒரு இந்து கோவில் என்பதாகும்.

வயநாடு அருகே ஸ்ரீ மஹா விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் முஸ்லீம் இளைஞர்கள் என தெரிந்தும், இந்த கோவிலை சுத்தம் செய்து பொதுமக்கள் தங்க உதவி செய்ய முடியுமா என ஒரு வித தயக்கத்துடனே கேட்டனர். அதற்கு அந்த இளைஞர்களும், "நாங்கள் முஸ்லீம்கள்தான். எங்களுக்கு உதவி செய்வதில் எந்த தயக்கமும் இல்லை. கோயில் அதிகாரிகள் இதற்கு சம்மதித்தால், உடனே சுத்த பணியில் இறங்குவோம்" என்றனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகமும் பெர்மிஷன் வழங்கியதை அடுத்து, விஷ்ணு கோயிலை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோயில் பளிச் பளிச்...தான். விஷயம் இதோடு முடியவில்லை. இளைஞர்கள் கோயில் முழுவதையும் சுத்தம் செய்தார்கள். ஆனால் கருவறையை மட்டும் எதுவுமே செய்யவில்லை. சுத்தப்படுத்த அங்கு நெருங்கவேல்லை.

இதனை கவனித்த அதிகாரிகள், "ஏன் கருவறையை மட்டும் சுத்தம் செய்யவில்லை" என கேட்டனர். அதற்கு இஸ்லாமிய இளைஞர்கள், "கோயிலின் கருவறையின் மதிப்பு எங்களுக்கு தெரியும். அதன் புனிதமும் எங்களுக்கு தெரியும். கருவறைக்குள் பூசாரிகளோ, அர்ச்சகர்களோதான் உள்ளே நுழைவர். அவர்கள்தான் அந்த இடத்தை சுத்தம் செய்வர். அதுதான் சரியாக இருக்கும்" என்று பதிலளித்தனர்.

இதேபோல, கொலப்புழா அருகில் மன்னர்காடு ஐயப்பன் கோயிலிலும் தண்ணீர் புகுந்து கோயில் மூடப்பட்டது. இதனை கேள்விப்பட்ட 20 இளைஞர்கள் கோயில் அருகே வந்தனர். இவர்கள் அனைவரும் எஸ்.கே.எஸ்.எப் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். "கோயிலை நாங்கள் சுத்தம் செய்து தரட்டுமா?" என நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். சம்மதம் கொடுத்த அடுத்த வினாடியே சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.

இந்துக்கள் கோயிலுக்குள் நுழைந்து சுத்தப்படுத்தி தரும் அளவுக்கு இஸ்லாமிய இளைஞர்களின் சகிப்புத்தன்மை பாராட்டுக்குரியது. அதேபோல வேற்று மதம் என்று பாராமல், மனமுவந்து உதவி செய்ய வந்தவர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்ததும் மகிழ்ச்சிக்குரியது. ஆபத்து என்று வந்துவிட்டால், இனம் என்ன, மதம் என்ன? இடம் என்ன? பொருள் என்ன? வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா" என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...