விஜய் மல்லையா - பாஜக தொடர்பு குறித்து ராகுல் காந்தி பகீர் தகவல்!

ஆகஸ்ட் 26, 2018 470

லண்டன் (26 ஆக 2018): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பிக்கும் முன்பு பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, தேசிய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப கொடுக்கமல் இருக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது சிபிஐ வழக்குத் தொடுத்தது. ஆனால், கைது செய்யும் முன்னரே இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றார் மல்லையா. தொடர்ந்து அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசும் சிபிஐ அதிகாரிகளும் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், தனது கைதுக்கு எதிராக மல்லையா, இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். சமீபத்தில் அவரது சார்பில், ‘இந்திய சிறைகளில் போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை எனவே அங்கு அடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று மல்லையா சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்திய அரசு, இங்கிலாந்து நீதிமன்றத்தில் மல்லையா அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோவை சமர்பித்துள்ளது. அனைத்தையும் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது, ‘மல்லையா, இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் மூத்த பாஜக தலைவர்களைச் சந்தித்தார். ஆனால், அவர்கள் யாரென்று என்னால் சொல்ல முடியாது’ என்றார்.

மேலும் மல்லையா போன்றவர்களுக்கு வித்தியாசமான அணுகுமுறை கையாளப்படக் கூடாது. எல்லா கைதிகளைப் போலத்தான் அவரும் நடத்தப்பட வேண்டும்’ என்றவர், ‘மெஹுல் கோக்சி, நிரவ் மோடி, மல்லையா போன்றவர்களுடன் இந்திய பிரதமருக்குத் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...