உத்திர பிரதேச மழை வெள்ளத்தில் 16 பேர் உயிரிழப்பு!

செப்டம்பர் 03, 2018 367

லக்னோ (03 செப் 2018): உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் அசாம், மேகாலாயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். இதில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஷாஜகான்பூர் மாவட்டத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் மழையால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஜான்சி மாவட்டத்தின் பெத்வா நதியின் நடுவே உள்ள தீவுப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 8 மீனவர்களை சில மணி நேரப் போராட்டத்துக்கு பின் இந்திய விமானப்படையினர் உயிருடன் மீட்டனர். இதனிடையே உத்தரபிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...