பாஜக எம்.எல்.ஏ மகன் கைது - காரணம் ஏன் தெரியுமா?

செப்டம்பர் 04, 2018 658

புதுடெல்லி (04 செப் 2018): முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொலைமிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்திலுள்ள தாமோ மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 5) முதல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தாமோ மாவட்டத்துக்கு உட்பட்டது ஹடா சட்டப்பேரவைத் தொகுதி. பாஜகவைச் சேர்ந்த உமா தேவி கட்டக் இத்தொகுதியின் எம்எல்ஏ-ஆக உள்ளார். இவரது மகன் பிரின்ஸ்தீப். இவர், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொலைமிரட்டல் விடுத்து ஃபேஸ்புக் தளத்தில் பதிவு ஒன்றை இட்டார். அதில், ’சிந்தியா ஹடா தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அவரை சுட்டுக் கொன்றுவிடுவேன்’ என்று பிரின்ஸ்தீப் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியினர் சிலர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், பிரின்ஸ்தீப் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹடா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தர்மேந்திரா சிங் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...