ஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய டிபன் பாக்ஸ் கொள்ளை!

September 05, 2018

ஐதராபாத் (05 செப் 2018): ஐதராபாத் அருங்காட்சியகத்தில் இருந்த நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ், கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புகழ்பெற்ற ஐதராபாத் அருங்காட்சியகத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்த காட்சிகள் இவை, நிஜாம் பயன்படுத்திய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க டிபன் பாக்சை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது புகழ்பெற்ற நிஜாம் அருங்காட்சியகம். பல்வேறு கலைப் பொருட்கள், பாரம்பரிய கலைச் சின்னங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஐதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய வைரக் கற்கள், நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தங்க டிஃபன் பாக்ஸ், சிறு தட்டு, தேநீர்க் கோப்பை மற்றும் வைரக் கற்கள் பதித்த கரண்டி ஆகியவை ஐதராபாத்தின் 7-ம் நிஜாம் மீர் ஓஸ்மான் அலிகான் என்பவருக்கு 1937ம் ஆண்டு பரிசுகளாக வழங்கப்பட்டன.

மொத்தம் 2 கிலோ எடையுள்ள தங்க டிஃபன் பாக்ஸ் உள்ளிட்ட இவற்றின் இன்றைய மதிப்பு 200 கோடி ரூபாயைத் தாண்டும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அருங்காட்சியகத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அங்கு, வெண்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், தங்க டிஃபன் பாக்ஸ், தேநீர் தட்டுகள், கரண்டி ஆகியவற்றை திருடித் தப்பித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் உள்ளே வந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவிக்களில் பதிவாகியுள்ளன. இந்தக் கொள்ளை குறித்து 10 தனிப்படைகளை அமைத்து ஐதராபாத் காவல்துறை விசாரித்து வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!