பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து இன்று பாரத் பந்த்!

செப்டம்பர் 10, 2018 540

புதுடெல்லி (10 செப் 2018): பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு திமுக, இடதுசாரிகள், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாயை தாண்டியும், டீசல் விலை லிட்டருக்கு 76 ரூபாயை கடந்தும் விற்பனை ஆகி வருகிறது.

இந்த நெருக்கடியான சூழலில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கம், மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அனைத்தும் மூடப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெரிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 65 லட்சம் கடைகள் மூடப்படும் என தெரிகிறது. தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அரசு பேருந்து வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், லாரிகள், ஆட்டோக்கள் இன்று இயங்காது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம் முழு அடைப்பால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி திரையரங்குகளில் இன்று பகல், மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லக்கி பெருமாள் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...