பிரதமர் மோடி மீது முன்னாள் பாஜக அமைச்சர்கள் குற்றச் சாட்டு!

September 12, 2018

புதுடெல்லி (12 செப் 2018): ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை தன்னிச்சையாக இறுதிசெய்து நாட்டின் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி விட்டுக் கொடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாஜக முன்னாள் அமைச்சர்களான யஷ்வந்த் சின்காவும், அருண் ஷோரியும் மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், நாட்டின் பாதுகாப்புக்கு 126 விமானங்கள் தேவை என்று பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் உள்ளிட்டவை தெரிவித்த போதும், ரஃபேல் ஒப்பந்தத்தில் விமானங்களின் எண்ணிக்கையை 36-ஆக குறைத்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

மேலும் ராணுவ உபகரணங்கள் கொள்முதலுக்கான அனைத்து விதிகளையும் புறந்தள்ளிவிட்டு, நாட்டின் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி விட்டுக் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஒரு விமானத்தின் விலை 670 கோடி ரூபாயிலிருந்து 1,670 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். தனது ஆதரவு தொழிலதிபர்களுக்காக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பிரதமர் ரத்து செய்துவிட்டதாகவும் அவர்கள் இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!