முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

செப்டம்பர் 26, 2018 631

புதுடெல்லி (26 செப் 2018): முத்தலாக் அவசர சட்டத்திற்கு தடை கோரி சமஸ்தா கேரளா ஜமியாத்துல் உலமா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

முஸ்லிம் ஆண்கள் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் கூறும் முறை உள்ளது. இந்த முத்தலாக் விவா கரத்து முறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து முஸ்லிம் பெண் உரிமைகள் பாது காப்பு மற்றும் திருமணச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.

இதையடுத்து முத்தலாக் முறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப் படாமல் நிலுவையில் உள்ளது.

ஆனால் இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி முத்தலாக் முறையில் உடனடியாக விவா கரத்து செய்வது சட்டப்படி செல்லாதது மட்டுமன்றி சட்ட விரோதமானதுமாகும். இதனை மீறி முத்தலாக் முறையில் உடனடி யாக மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும். இதனிடையே இந்தச் சட்டத்தில் ஜாமீன் பெறும் பிரிவு புதிதாகச் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த சட்டத் துக்கு தடை கோரி தற்போது உச்ச நீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமியாத்துல் உலமா என்ற முஸ்லிம் அமைப்பு நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், முத்தலாக் தடை அவசரச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முத்தலாக் தடை அவசரச் சட்டத்தில் புகாருக்கு உள்ளாகும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து தொடர்பாக முஸ்லிம் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தால் சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கு எதிரானதாக இந்தச் சட்டம் இருக்கிறது. எனவே இதற்கு தடை விதிக்கவேண்டும். என்று அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...