போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸா? - மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு!

அக்டோபர் 02, 2018 561

புதுடெல்லி (02 அக் 2018): போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கலந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட சுகாதார துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான குழந்தைகள் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பலியானதற்கும் இந்த மருந்து கலப்படத்திற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற ரீதியும் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்ட போலியோ மருந்துகளை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...