15 லட்சம் தருவதாக பொய்களை அள்ளி வீசினோம் - மத்திய அமைச்சர் அதிர்ச்சி கருத்து!

அக்டோபர் 10, 2018 496

புதுடெல்லி (10 அக் 2018): தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்களை அள்ளி வீசினோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்காக பொய்களை அள்ளி வீசினோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலிலின் போது, இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறியிருந்தார். தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். ஆனால், அவர் கூறியபடி கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. மக்கள் கணக்கில் இதுவரை பணம் செலுத்தவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லாமல், பல தேசிய அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. அதனால் இஷ்டத்திற்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். ஆனால் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்துவிட்டோம். ஆகவே மக்களிடன் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனையும் நாங்கள் சமாளிக்க வேண்டும் என சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

மக்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு பாஜக ஆட்சியை பிடித்திருப்பதை பாஜக அமைச்சரே உறுதிசெய்திருப்பதை, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் அமைச்சர் பேசிய வீடியோவை பகிர்ந்து மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...