லவ் ஜிஹாத் எந்த ஆதாரமும் இல்லை - ஹாதியா உள்ளிட்ட வழக்குகள் முடிவுக்கு வருகிறது!

அக்டோபர் 18, 2018 657

திருவனந்தபுரம் (18 அக் 2018): தீவிரவாத தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லாததால் ஹாதியா உள்ளிட்ட 11 வழக்குகளை முடித்து வைக்க என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளது.

இஸ்லாமிய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்ட கேரளப்பெண் ஹாதியாவை, தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது என்ற புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியாததால் வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை அடுத்த வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகள் அகிலா (வயது 24), முஸ்லிமாக மதம் மாறியதோடு, தன் பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். மேலும் ஷபீன் ஜஹான் என்பவரை திருமணம் செய்தார்.

இதையடுத்து, அகிலாவின் தந்தை அசோகன் மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது. மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் அவரை சிரியாவுக்கு கடத்தி செல்ல முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அகிலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் ஷபின் ஜஹான் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறினார். திருமணத்தை பதிவு செய்ய அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் சமர்ப்பித்தார். மேலும் தன் விருப்பப் படியே மதம் மாறியதாகவும் யாரும் என்னை வற்புறுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்தத் திருமணத்தை ஏற்க கோர்ட்டு மறுத்தது. மேலும், இத்திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு தந்தையுடன் ஹாதியாவை அனுப்பி வைத்தது நீதிமன்றம்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே, இந்தத் திருமணத்தில் தீவிரவாத இயக்கங்கள் பின்னணி இருப்பதாகவும், ஷபின் ஜகானுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியது.

ஷபின் ஜகானின் மனு மீதான விசாரணை பல கட்டங்களாக நடந்த நிலையில், ஹாதியா உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியான வாக்குமூலத்தை அடுத்து திருமணம் செல்லும் என உச்ச நீதிமன்றாம் தீர்ப்பு அளித்தது.

தற்போது ஹாதியா, ஷபீன் ஜஹான் வழக்கில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லததால் இந்த வழக்கை முடிக்க என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளது. மேலும் ஹாதியா வழக்கு மட்டுமல்லாமல் கேரளாவில் காதல் மூலம் மதம் மாற்றுவதாக எழுந்த புகாரில் 11 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது. இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் காதல் மூலம் மதமாற்றம் என்பதற்காக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களின் விருப்பப்படியே மதமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட வழக்குகளை முடிக்க முடிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யலாம் என தகவல்கள் கூறுகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...