பஞ்சாப் ரெயில் விபத்து மக்களின் அலட்சியமே - அமைச்சர் சித்து தகவல்!

அக்டோபர் 20, 2018 445

அமிர்தசரஸ் (20 அக் 2018): பஞ்சாபில் தசரா கொண்டாட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது மக்களின் அலட்சியத்தால் தான்; இது சதிசெயல் அல்ல என அமைச்சர் நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் ஜோரா பஜார் என்ற இடத்தில் தசரா விழா கொடாட்டம் நேற்று கொண்டாடப்பட்டது. அங்குள்ள தண்டவாளத்தின் அருகே உள்ள மைதானத்தில் ராவணன் உருவ பொம்மையை எரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டினர். தண்டவாளங்களின் மறு பக்கத்தில் ராவணன் பொம்மை எரிக்கப்பட்டது. இதனை காண தண்டவாளத்தின் இரு பக்கத்திலும் உள்ள காலி இடத்தில் ஏராளமானவர்கள் கூடி இருந்தனர்.

அப்போது அந்த வழியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் வழியாக ஜலந்தர் செல்லும் ரயில் சென்றது. ராவணன் உருவ பொம்மை எரிந்த போது பட்டாசுகள் வெடித்த ஒலியால் ரயிலின் சத்தம் கேட்கவில்லை. இதனால் தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி தள்ளி விட்டு சென்றது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

இதையடுத்து, இந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்தார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நிவாரண பணிகளை நேரில் பார்வையிட சம்பவ இடத்துக்கு தான் செல்வதாகவும் அமரீந்தர் சிங் தெரிவித்தார். அதுபோல், மாநிலத்தின் உள்துறை செயலாளர், சுகாதார செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோரையும் சம்பவ இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

மாநில உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, நிலைமையை கேட்டறிந்தார். பஞ்சாப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதற்கிடையே, இந்த ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் உதவி வருவதை கேள்விப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்துக்கு தனது இரங்கல் செய்தியில், தேவையான உதவிகளை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...