அலோக் வர்மா நீக்கத்துக்கு எதிராக ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

அக்டோபர் 26, 2018 520

புதுடெல்லி (26 அக் 2018): சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கத்துக்கு எதிராக சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அலோக் வர்மாமை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். ‘சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வந்தார். ஆனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளார். இதில் பிரதமர் மோடியின் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது ரபேல் பிரச்சினைக்கு அருகில் யார் வந்தாலும் நீக்கப்படுவார், துடைத்து எறியப்படுவார். நாடும் அரசியல் சட்டமும் மிகுந்த ஆபத்தில் உள்ளன’ என காங்கிரஸ் கூறியுள்ளது. பிற எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரிக்க முற்பட்டதாலே அலோக் வர்மாவை அரசு நீக்கியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில், சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம் அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவடுவர் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...