பாபர் மசூதி வழக்கு ஜனவரி மாதம் ஒத்தி வைப்பு!

அக்டோபர் 29, 2018 472

புதுடெல்லி (29 அக் 2018): பாபர் மசூதி வழக்கு வரும் ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இந்துத்வா அமைப்பினரால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. இதனை தொடர்ந்து இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.

1993-ல் இந்திய அரசு அங்குள்ள 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது? போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹி அகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன.

இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட், மே 2011-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுவின் மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் இம்மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு எது? என்று தீர்மானித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என இன்று தெரிவித்துள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...