மனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்!

நவம்பர் 11, 2018 784

லக்னோ (11 நவ 2018): மனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய ஃபைசுல் ஹஸன் கத்ரி என்ற நவீன ஷாஜஹான் விபத்தில் காலமானார் அவருக்கு வயது 83.

உத்தரப்பிரதேச மாநிலம் கேசர் காலன் பகுதியைச் சேர்ந்தவர் ஃபைசுல் ஹஸன். இவர், கடந்த, 2011 -ம் ஆண்டு புற்று நோயால் காலமான தன் காதல் மனைவி தஜாமுல்லி பேகமுக்கு சொந்த செலவில், தாஜ்மஹால் போன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தார்.

தபால்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தான் சேமித்த சேமிப்பு மூலம் தனது நிலத்தில், மனைவியின் நினைவிடத்தைச் சுற்றி ஆக்ராவில் இருக்கும் ஒரிஜினல் தாஜ்மஹால் போன்ற கட்டமைப்பை, உள்ளூரில் உள்ள கொத்தனார் ஒருவரின் உதவியுடன் கட்ட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, தனது உழைப்பால், ஒரிஜினல் தாஜ்மஹால் போன்ற அமைப்பைக் கொண்டு வந்துவிட்டார்.

அதன் பின்னர், மக்களின் கவனத்தைப் பெற்றார் ஃபைசுல் ஹஸன் கத்ரி. ஊடகங்கள் தொடர்ச்சியாக மினி தாஜ்மஹால் குறித்துப் பேச, 2015 -ம் ஆண்டு அப்போதைய அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், நேரில் அழைத்துப் பாராட்டியதோடு, மீதம் உள்ள பணிகளை முடிக்க நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்தார். முதல்வர் மட்டுமல்ல, பொதுமக்களும் பலர் நிதியுதவி வழங்க முன்வந்தனர். ஆனால், இது எனது காதல் மனைவிக்காக நான் கட்டும் நினைவுச் சின்னம். இதை எனது செலவில்தான் கட்டுவேன் என்று அனைத்து நிதியுதவிகளையும் மறுத்துவிட்டார்.

ஒருகட்டத்தில், தனது மினி தாஜ்மஹாலில் பதிக்க மார்பிள் கற்கள் வாங்கக் காசில்லாமல் இருந்தபோது கூட, யாருடைய நிதியையும் எதிர்பார்க்கவில்லை. தனது ஓய்வூதியத்தை சேமித்து வருவதாகத் தெரிவித்த அவர், விரைவில் மார்பில் கற்கள் வாங்கிப் பதிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், தனது கிராமத்தில் அரசுப் பெண்கள் கல்லூரி அமைய, தனது இடத்தைத் தானமாக வழங்கி, அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார்.

இத்தனை சாதனைகளை சாதாரணமாகச் செய்த, இந்த `நவீன உலகின் ஷாஜகான்’ கடந்த வியாழன் அன்று இரவில் சாலையில் நடந்து செல்லும்போது இருசக்கர வாகனம் மோதித் தூக்கி வீசப்பட்டார். நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர். (வெள்ளி) சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தச் சம்பவம், அவரது கிராமத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

ஃபைசுல் ஹஸன் கத்ரி, மினி தாஜ்மஹால் கட்டும்போதே, தன் மனைவியின் நினைவிடம் அருகில் தான் இறந்த பின்னர், தனது உடலை அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தில் குழி தோண்டி வைத்திருக்கிறார். அந்தக் கட்டடத்தின் உள்ளே, அவர் விரும்பிய அந்த இடத்தில் அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப் பட்டது.

கடந்த 2015 -ம் ஆண்டு, பிரபல ஆங்கில ஊடகத்துக்குப் பேசிய ஃபைசுல் ஹஸன் கத்ரி, ``நான் ஒரு ஏழையின் காதல் கதையைச் செதுக்கிக்கொண்டிருக்கிறேன். தாஜ்மஹால் அளவுக்கு இது புகழ் பெறுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பொதுமக்கள் இதை இலவசமாகப் பார்வையிடலாம்” என்றார். அவர் எங்கள் ஊருக்குப் பெருமை சேர்த்தவர் என்கின்றனர் கிராம மக்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...