நீதிபதி லோயா விஷம் கொடுத்தே கொல்லப் பட்டார் - திடுக்கிடும் தகவல்!

நவம்பர் 22, 2018 752

மும்பை (22 நவ 2018): நீதிபதி லோயா ரேடியேஷன் விஷம் கொடுத்து கொலை செய்யப் பட்டார் என்று வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, இறுதியாக விசாரணை நடத்திய வழக்குகளில் ஒன்று குஜராத்தில் நடந்த சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு. இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாக்பூர் சென்றிருந்த லோயா 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் மஹதிராவ் உகே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நீதிபதி லோயா ரேடியேஷன் விஷம் வைத்து கொலை செய்யப் பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் நாளை உயிருடன் இருப்பேனா என்பது குறித்து தெரியாது. ஆனால் லோயா மரணம் குறித்து ஆவணங்கள் அழிக்கப் பட்டு விட்டன. எனினும் வேறு ஒரு துறையினர் மூலம் அதனை மீட்டெடுத்து தற்போது அளித்துள்ள மனுவுடன் இணைத்து நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் அவர் இயற்கையாகவே மரணித்தார் என்றும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...