தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் அபாயம்!

டிசம்பர் 20, 2018 538

சென்னை (20 டிச 2018): நாளை (டிசம்பர் 21 ஆம் தேதி) முதல் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த வேலை நிறுத்தத்தினால் 25-ம் தேதி வரை வங்கி சேவைகள் பாதிப்படையும் அபாயமும் உள்ளது.

வங்கி ஊழியர்கள் சங்கங்கள் ஊதிய உயர்வு வேண்டி டிசம்பர் 21-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதனையடுத்து வார இறுதி, அரசு விடுமுறை என 22,23 மற்றும் 25-ம் தேதிகளில் வங்கி விடுமுறை. வேலைநிறுத்தப் போராட்டம் 24-ம் தேதியும் தொடர்ந்தால் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி என மூன்று வங்கியையும் எஸ்பிஐ துணை வங்கி போன்று இணைத்து ஒரே வங்கியாக இயக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த மூன்று வங்கிகளும் இணைந்தால் பல வங்கி ஊழியர்கள் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நிறைய வங்கிக் கிளைகள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே இதுபோன்று எஸ்பிஐ துணை வங்கிகள் இணைந்த போது பல்லாயிரக்கணக்கான மூத்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்ததும் அரங்கேறியது. இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊழியர்கள் ஊதிய உயர்வு, 5 நாட்கள் வேலை மற்றும் பழைய பென்ஷன் முறை போன்ற கோரிக்கைகளை வைத்தும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. வேலை நிறுத்தத்தில் குறைந்தபட்சம் 3.2 லட்சம் வங்கி அதிகாரிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...