வாஜ்பாய்க்கு 25 அடி உயர சிலை வைக்க முடிவு!

டிசம்பர் 25, 2018 463

லக்னோ (25 டிச 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயர சிலை நிறுவப்படும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. தலைநகர் லக்னோவில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங், கவர்னர் ராம்நாயக் உள்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் பேசிய யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசம் மாநிலத்துடன் வாஜ்பாய் பலமான பிணைப்பை வைத்திருந்தார். இம்மாநிலத்தில் பல்ராம்பூரில் இருந்து தனது பொதுவாழ்வை தொடங்கிய அவர், லக்னோ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்துள்ளார்.

தீன்தயாள் உபாத்யாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரிடமிருந்து அரசியல் பாடங்களை கற்ற வாஜ்பாய் நல்லாட்சி என்று சொல்லுக்கு ஆதாரமாய் விளங்கினார். எனவே அவரை பெருமை படுத்தும் விதமாக இந்த மாநில அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டப்படுகிறது.

அவரது நினைவுகளையும் புகழையும் நினைவுகூரும் வகையில் அரசு தலைமை செயலகத்தில் வாஜ்பாய்க்கு 25 அடி உயர சிலை விரைவில் அமைக்கப்படும்." என தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...