நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னரே ராமர் கோவிலுக்கான சட்ட உத்தரவு: மோடி திட்டவட்டம்!

ஜனவரி 01, 2019 382

புதுடெல்லி (01 ஜன 2019): நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னரே ராமர் கோவில் கட்டுவதற்கான சட்ட உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொதுவாக நேர்காணல் நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்வதில்லை. ஆனால் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு குறிப்பிட்ட செய்தி நிறுவனத்திற்கு மட்டும் மோடி இன்று பேட்டி அளித்துள்ளார்.

இதில் அவர் தெரிவிக்கயில், ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னரே ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார். அவர் சொந்த காரணங்களுக்காகவே பதவி விலகினார்.

நாங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் செய்வதற்கு ஓராண்டு முன்னரே, யாராவது கறுப்புப் பணம் வைத்திருந்தால் அதை இப்போதே முறையாக ஒப்படைத்து விடுங்கள், விளைவுகளிலிருந்து தப்புவீர்கள் என்று எச்சரித்தோம். கறுப்புப் பணத்தைப் பதுக்கியிருந்த சிலர் மட்டுமே பணத்தை திருப்பி அளித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) துணிச்சலான நடவடிக்கை. இந்த துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவர்களில் எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ, விடியலுக்குள் அனைத்து வீரர்களும் திரும்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தேன்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...