போர்க்களமான கேரளா - இருவர் பலி: அறிக்கை கேட்கிறார் ஆளுநர்!

ஜனவரி 03, 2019 391

திருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பாஜகவினருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த வன்முறையில் இருவர் பலியாகியுள்ளனர்.

சபரிமலையில் நேற்று அதிகாலை இரு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் சில இடங்களில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள கம்யூனிஸ்ட்டுகள் நிர்வாகிகள் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் இடையே நேற்று கேரள தலைமை செயலகம் முன்பு மோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதலில் பாஜக-வை சேர்ந்த சந்திரன் உன்னிதான் என்பவர் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்றும் பாஜகவினர் கடைகளை அடைக்கும் படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாஜக-வினர், இந்துத்வா அமைப்பினர் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் மாநிலம் முழுவதிலும் பதற்றமான நிலைமை நீடிக்கிறது. கர்நாடகா, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துக்கள் கேரளா எல்லையில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டது.

இன்று முழுஅடைப்பு போராட்டம் காரணமாக, கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம். வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா போலீசார் தெரிவித்தனர். அதையும் மீறி கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது ஏற்ப்பட்ட வன்முறையில் 40-க்கு அதிகமான போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அதை காட்சிப்படுத்திய பெண் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 100-க்கு அதிகமான பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்த வன்முறைச் சம்பத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை, அதன் பேரிலேயே கனகதுர்கா(44), பிந்து(42) ஆகியோரை சபரிமலையில் அனுமதித்ததாக தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் இச்சம்பவம் குறித்து அறிக்கை கோரியுள்ளார். வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தங்களுக்கு அனுப்ப வேண்டும் என போலீசாருக்கு, மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை கேரளாவில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 266 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் 334 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த வன்முறையில் இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...