பாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா!

ஜனவரி 13, 2019 427

மும்பை (13 ஜன 2019): உறுதிமொழிகளை நிறைவேற்ற பாஜக அரசு தவறிவிட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

மும்பையில் பேசிய உத்தவ் தாக்கரே, பொதுப்பிரிவினரில் ஆண்டுக்கு 8 இலட்ச ரூபாய்க்குக் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்குப் பத்து விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது குறித்துக் கருத்துத் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பழைய கூட்டணி கட்சி என்றுகூட பார்க்காமல் அடித்து வீழ்த்துவோம் என்று யாரோ சிவசேனாவை குறிப்பிட்டு கூறியுள்ளனர். சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

அரசியல் பயணத்தில் மோடி அலையைப்போல் எத்தனையோ அலைகளை சிவசேனா சந்தித்து விட்டது. ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் காலத்து ஆயுதமாக பயன்படுத்துபவர்கள் நாங்களல்ல. அப்படி செய்பவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே நாங்களும் தேர்தலின்போது ராமர் கோவில் பிரச்சனையை எழுப்புகிறோம்.

வங்கிக் கணக்கில் 15 இலட்ச ரூபாய் போடுவதாகவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாகவும் மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டினார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டும் என்கிற எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால் ஆண்டுக்கு 8 இலட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாமே எனத் தெரிவித்தார்.

ராமர் கோவில் கட்டுவதை காங்கிரஸ் தடுப்பதாக இந்த அரசு கூறுகிறது. அதற்கான தண்டனையை கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கி விட்டனர். ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை கூட்டணியில் வைத்துகொண்டு எப்படி ராமர் கோவில் கட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பாஜக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஆனால் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரே கொள்கையுடன் உலாவரும் பல்வேறு பிரிவினர் என்பது மட்டுமே உண்மை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...