சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்

ஜனவரி 21, 2019 434

பெங்களூரு (21 ஜன 2019): சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி வயது மூப்பு பிரச்சனை காரணமாக இன்று காலமானார்.

கர்நாடக மாநிலத்தின் சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி அவர்கள் இன்று காலமானார். 111 வயதான அவரது மறைவுக்கு மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக உள்ளவர் சிவகுமார சுவாமி. கடந்த 1941-ம் ஆண்டிலிருந்து இவர் துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிவகுமார சுவாமிஜி கடந்த ஆண்டு பெங்களூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று பின்னர் மடத்துக்கு திரும்பிய அவர், நேற்றிரவு வயது மூப்பு காரணமாக தீடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி இன்று காலை 11.40 மணியளவில் காலமாகினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமிஜி-யின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பரிந்துரைத்திருந்தார்.

குறிப்பு : நாளை மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி-யின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. சுவாமிஜி-யின் மறைவுக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...