முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மரணம்!

ஜனவரி 29, 2019 378

புதுடெல்லி (29 ஜன 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல் நலக்குறைவால் காலமானார்.

88 வயதான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிப்பு இருந்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையாக கிடந்தார். 1970-களில் சோஷியலிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவராக ஜார்ஜ் இருந்தார்.

ஜனதா தள கட்சியின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பின்னாளில் சமதா கட்சியை தொடகினார். 1975-ம் ஆண்டின்போது இந்திரா காந்தியால் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான கைதிகளுடன் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் 1977-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிறையில் இருந்தவாறே அவர் முசாபர்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜார்ஜ் பிறந்த நாளை கொண்டாடினார்.

வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றியிருந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அதனைத் தவிர்த்து தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, ரயில்வே அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1930-ல் ஜார்ஜ் பிறந்தார். முதலில் அவர் பாதிரியாராகத்தான் பயிற்சி பெற்றிருந்தார். பின்னர் அரசியலில் நுழைந்த அவர் 1967-ல் மும்பையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

1974-ல் தேசிய அளவில் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஒருங்கிணைத்தார். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஹீரோவாக மாற்றியது. 1977-ல் ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தபோது மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். ஜார்ஜுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

2004-ல் சவப்பெட்டி ஊழல் தொடர்பாக ஜார்ஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...