பாபர் மசூதி இருந்த பகுதியில் உள்ள நிலத்தை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க கோரி மத்திய அரசு மனு!

ஜனவரி 29, 2019 474

புதுடெல்லி (29 ஜன 2019): அயோத்தியில் பாபர் மசூதி இருந்த பகுதியை சுற்றியுள்ள நிலங்களை நில உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “கடந்த 1991-ம் ஆண்டு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியைச் சுற்றி 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வாங்கி இருந்தது. அந்த நிலப்பகுதியை உண்மையான உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவை விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், "அயோத்தியில் அரசு வாங்கியுள்ள 67 ஏக்கர் நிலம் ராம் ஜென்மபூமி நயாஸ்க்கு உரிமையானது. அதில் எந்தவிதமான சட்டச்சிக்கலும் இல்லை. அதைத் திரும்ப ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பது சரியான நடவடிக்கை. அதனை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரம் குறித்த வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி பாப்தே வராததால் விசாரணை ரத்து செய்யப்பட்டது. எப்போது விசாரணை நடைபெறும் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...