சிமி அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

பிப்ரவரி 02, 2019 373

புதுடெல்லி (02 பிப் 2019): இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி அமைப்புக்கு எதிரான தடையை மேலும் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் ‘சிமி’ எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (Students Islamic Movement of India) 25-4-1977 அன்று தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் கிளை அமைப்புகள் உள்ளன.

கயா குண்டுவெடிப்பு, பெங்களூரு நகரில் உள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கம் குண்டுவெடிப்பு, சிறை உடைப்பு, போலீசாரை கொன்றது உள்ளிட்ட 58 வழக்குகளில் இந்த அமைப்பை சேர்ந்த சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டில் இந்த அமைப்பை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது. சில வேளைகளில் தடையும் விதிக்கப்பட்டது.
மத்தியில் முன்னர் ஆண்ட காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சிமி அமைப்புக்கு எதிராக கடந்த 1-2-2014 அன்று ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சிமி அமைப்பின் சட்டவிரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்தி, தடுக்கத் தவறினால் தலைமறைவாக இருக்கும் இந்த அமைப்பினர் மீண்டும் ஒன்றுகூடி நாட்டுக்கு எதிரான கருத்துகளை பரப்பி பிரிவினைவாதத்தை தூண்டிவிடக்கூடும் என்பதால் இந்த அமைப்பு மீது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...