கொல்கத்தா போலீசை கைது செய்ய தடை - ஒத்துழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பிப்ரவரி 05, 2019 397

கொல்கத்தா (05 பிப் 2019): கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3-வது நாளாக மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜியுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரியை, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்ற விவகாரத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேர் எதிர் போட்டி ஏற்பட்டுள்ளது. இது அவசர கால பிரகடன நிலையை எனக்கு நினைவுபடுத்துகிறது. மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் அவசர, அவசரமாக கைது செய்ததையும், அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதேபோன்றதொரு நிலையைத்தான் இந்த நாடு அவசர கால சூழ்நிலையில் சந்தித்தது. மேற்கு வங்காளத்தில் இப்போதுள்ள சூழ்நிலை அவசர கால நிலையைப் போன்றே உள்ளது.

மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கும் ‘மகாகத்பந்தன்’(மெகா கூட்டணி) கூட்டணியின் துருப்புச்சீட்டு ஆவார். அவருடன் பெரும் கூட்டணி அமைத்துள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சியும், நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய செயல்பாடு உள்ள பங்குதாரர்தான்.இவ்வாறு அவர் கூறினார்.

கொல்கத்தா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தது. அதில் ஒரு மனுவில், “பலமுறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார், சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த ஆவணங்களை சி.பி.ஐ. வசம் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் சி.பி.ஐ. தாக்கல் செய்த மற்றொரு மனுவில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றதாகவும், அவர்களை மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும், அரசியல்வாதிகளுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை என்றும், எனவே அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் மனு மீதான விசாரணை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று கூறினார். சாரதா நிதி மோசடி வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்துள்ளன என சிபிஐ சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

போலீஷ் கமிஷனர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க நாங்கள் உத்தரவிடுகிறோம். பின்னர் கோர்ட் அவமதிப்பு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.போலீஸ் கமிஷனர் ராஜூவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க கோரியும், விசாரணைக்கு ஆஜராக கோரியும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. போலீஷ் கமிஷனரை கைது செய்யக்கூடாது, சிபிஐ போலீஸ் கமிஷனரை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை பெறக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை ஆஜராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அதுபோல் கோர்ட் அவமதிப்பு வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே கொல்கத்தாவில் 3-வது நாளாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...