மேற்கு வங்கம் வரும் பாஜக தலைவர்களை விரட்டி அடிக்கும் மமதா

பிப்ரவரி 06, 2019 364

கொல்கத்தா (06 பிப் 2019): மேற்கு வங்கத்தில் யோகி ஆதித்ய நாத்தை தொடர்ந்து மாநில முன்னாள் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஹெலிகாப்டரும் தரையிறங்க மறுக்கப் பட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேற்கு வங்கம் மாநிலத்தில் பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. இதற்காக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கி வருகின்றனர்.

இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஹராம்பூர், கரக்பூர் ஆகிய இரு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் பஹராம்பூர் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.

இந்நிலையில், கரக்பூர் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது மம்தாவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மாநில அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என தெரிவித்தார்.

ஏற்கனவே, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டரும் தரையிறங்க அனுமதி மறுக்கப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...