சக டாக்டர்களின் பாலியல் தொல்லையால் பெண் டாக்டர் தற்கொலை!

பிப்ரவரி 07, 2019 482

புதுடெல்லி (07 பிப் 2019): சக டாக்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் டெல்லியில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கதிரியக்கவியல் டாக்டராக பணியாற்றியவர் டாக்டர் பூனம் வோரா (வயது 52). இவர் பாபா காரக் சிங் மார்க் பகுதியில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் டாக்டர் பூனம் வோரா நேற்று தனது வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியில் சென்றிருந்த குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. டாக்டர் பூனம் வோராவின் செல்போனையும் தொடர்புகொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது, டாக்டர் பூனம் வோரா சடலமாக தொங்கினார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு, டாக்டர் பூனம் வோரா எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில், தன்னுடன் பணியாற்றிய 3 டாக்டர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார். அந்த டாக்டர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பூனம் வோராவின் செல்போனையும் கைப்பற்றிய போலீசார், அதில் உள்ள அழைப்புகள் மற்றும் தகவல்களை ஆய்வு செய்துவருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...