ரஃபேல் ஊழலில் புயலைக் கிளப்பியுள்ள இன்னொரு கடிதம்!

பிப்ரவரி 09, 2019 464

புதுடெல்லி (09 பிப் 2019): ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலில் இன்னொரு புயலைக் கிளப்பியுள்ளது ஒரு கடிதம்.

இது குறித்து இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பாதுகாப்புத்துறை துணைச் செயலாளர் எஸ்.கே.சர்மா, அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியிடப்பட்டு சில குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த வேலையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தனியாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கடிதத்தில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இது போன்று தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவது, பேச்சுவார்த்தை குழுவின் முயற்சிகளை பலவீனமாக்கும் என்றும், இதனை பிரதமர் அலுவலக அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை வைத்து மீண்டும் ரஃபேல் விவகாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது காங்கிரஸ். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு இந்த கடிதம் வலுசேர்த்திருப்பதாகக் கூறினார். பிரதமர் மோடி விதிகளை மீறி பேச்சுவார்த்தையில் தலையிட்டுள்ளதாகவும் ஒப்பந்தத்தின் பலன் அனைத்தும் தனி மனிதர் ஒருவருக்கு கிடைக்கும்படி அவர் செய்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இந்த ஒப்பந்தம் மூலம் மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை தனது நண்பர் அனில் அம்பானிக்கு மோடி கொடுத்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாதுகாப்புத்துறை அமைச்சரின் கருத்துக்களை திட்டமிட்டு தவிர்த்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். ஒரு அமைச்சகத்தின் திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிய வேண்டும் என்பதற்காக அந்த அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விபரங்கள் கேட்பது தலையீடாகாது என்று விளக்கமளித்துள்ள நிர்மலா சீதாராமன், இது வழக்கமான ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோனியாகாந்தி, பிரதமர் அலுவலகம் வரை முடிவுகளை தீர்மானித்ததுதான் தலையீடு என்றும் நிர்மலா சீதாராமன் பதிலடிகொடுத்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக இருந்த எஸ்பிபி சின்ஹாவும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்களையும், இந்து நாளிதழ் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்த குறிப்பை எழுதிய எஸ்.கே.சர்மா பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றவர் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். உண்மைகளை மறைத்து ரஃபேல் பேச்சுவார்த்தைக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக எஸ்.கே.சர்மாவின் கடிதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எஸ்பிபி சின்ஹா, எஸ்.கே.சர்மா அனுப்பிய கடிதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் எழுதிய குறிப்பு வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...