உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி!

பிப்ரவரி 11, 2019 328

லக்னோ (11 பிப் 2019): உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக திங்கட்கிழமை பொறுப்பேற்றார் பிரியங்கா காந்திக்கு லக்னோ நகரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக சோனியா, ராகுலை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்து உள்ளார்.
பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல் அறிவித்தார்.பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்ற 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் திங்கட்கிழமை உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர்.
இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து திங்கட்கிழமை பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தபோது காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

லக்னோ நகரின் மையப் பகுதியில் மால் அவென்யூ எனும் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான “நேரு பவன்” நோக்கி வேனின்மீது நின்றவாறு அவர்கள் பேரணியாக சென்றனர்.
சுமார் 15 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த பேரணியால் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பேரணி செல்லும் வழிநெடுக பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும், பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. லக்னோ நகரில் திரும்பிய திசையெல்லாம் பிரியங்காவை வரவேற்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளன.

முதல்முறையாக பொறுப்பு ஏற்க வருவதால் பிரியங்காவுக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 15 கி.மீ. தூரப்பாதையில் 32 இடங்களில் பிரியங்காவுக்கு காங்கிரசார் வரவேற்பு கொடுக்க உள்ளனர். ஓரிரு இடங்களில் பிரியங்கா தொண்டர்கள் மத்தியில் பேச மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ஹசரத்கஞ்ச்-ல் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சிலைகளுக்கு ராகுல், பிரியங்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கட்சி அலுவலகமான நேருபவன் முன்பு இருக்கும் நேரு சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உள்ளே சென்று கட்சிப் பொறுப்பை ஏற்க பிரியங்கா ஏற்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...