பிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்!

பிப்ரவரி 20, 2019 359

மும்பை (20 பிப் 2019): ஜாக்கி ஷெராஃப், விவேக் ஓபராய், சன்னி லியோன், அமீஷா படேல், பூனம் பாண்டே உட்பட 30-க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளனர்.

இவர்களுக்கு பணம் கொடுத்தால் இவர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் சமூகவலைதளங்களில் பதிவிடுவர் என கோப்ராபோஸ்ட் என்னும் ஊடகம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இதைப் போன்ற ஸ்டிங் ஆபரேஷன்களுக்காகவே புகழ்பெற்ற ஊடகமான கோப்ராபோஸ்ட் இதை `Operation Karaoke' என அழைக்கிறது. இதில் வேலைபார்க்கும் நிருபர்கள் பிரபல கட்சிகளின் மக்கள் தொடர்பு பிரமுகர்களாக வேடமிட்டு பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு அடுத்து ஓரளவு பிரபலமடைந்திருக்கும் அடுத்தகட்ட நட்சத்திரங்களை அவர்களது மேனேஜர்கள் வழியாகச் சந்தித்து குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகப் பதிவிட பணம் தருவதாக அணுகியுள்ளனர்.

இப்படித் தொடர்புகொண்டதில் 30+ பிரபலங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய தளங்களில் குறிப்பிடப்பட்ட கட்சிகளுக்கு ஆதரவாகப் பதிவுசெய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோ நட்சத்திரங்கள். சிலர் பாடகர்கள், மற்றும் சிலர் திரைபிரபலங்கள். மக்களவை தேர்தல் வருவதால் தங்களின் பங்கு அதிகமாகத் தேவைப்படும் என அவர்களிடம் இவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோப்ராபோஸ்ட்டின் தலைமை ஆசிரியர் அனிருதா பால், ``இவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கட்டுமான விபத்துகள் போன்றவற்றில் அரசு எடுக்கும் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்குக்கூட முட்டுகுடுக்க தயாராக உள்ளனர். ஒரு போலி ஒப்பந்தம் மூலம் வேறொரு பொருளுக்கு விளம்பரம் செய்வதாக கையொப்பமிட்டுவிட்டு அரசியல் விளம்பரங்களைக் கமுக்கமாகச் செய்கின்றனர் இந்தப் பிரபலங்கள்" என்றார்.

அவர் கூறியதை வைத்துப் பார்க்கையில் இந்த ஆபரேஷனுக்காக ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் பல ட்வீட்களை பதிவிட்டுள்ளது கோப்ராபோஸ்ட். அதில் ஒவ்வொருவரும் என்ன பேசியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

அந்தத் தகவல்களின்படி இந்தப் பிரபலங்கள் இதற்கான தொகையாக ஒரு பதிவுக்கு 2 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளனர். ஒருவர் இன்னும் ஒருபடி மேலே சென்று 8 மாத ஒப்பந்தத்திற்கு 20 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இதில் கறுப்புப் பணம் வேண்டாம் என்றும் யாரும் கூறவில்லை. பலரும் சேரவேண்டிய தொகையைப் பணமாகப் பெறவே விரும்பியிருக்கின்றனர். வெள்ளைப் பணத்தில் ஒரு சிறிய பகுதி கொடுக்கப்படும் எனக் கூறியதற்கே சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தும் அளவில்தான் இருந்துள்ளனர். ஏற்கெனவே 2012-ல் கோப்ராபோஸ்ட் நடத்திய ஆபரேஷன் ஒன்றில் பாலிவுட்டில் எந்தளவு கறுப்புப் பணம் ஊடுருவியுள்ளது என்பது வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டிருந்தது. இத்தனை வருடங்களில் எதுவும் மாறவில்லை என்பதை இவர்களின் இந்தப் பரிவர்த்தனை முறைகள் எடுத்துக்காட்டுகின்றன என கோப்ராபோஸ்ட் தெரிவித்தது.

பலரும் கொடுக்கப்படும் விஷயங்களை அப்படியே பதிவிடமாட்டோம். நாங்கள் எங்கள் தொனியில் பதிவிட்டால்தான் மக்கள் அதை நம்புவர் எனத் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் காட்ட பணம் பெறாமல் இப்போதே தங்கள் பக்கங்களில் கருத்துகளை பதிவிடத்தொடங்கியுள்ளனர் சிலர். தங்கள் படங்களுக்கான பத்திரிகையாளர் சந்திப்புகளில்கூட சாமர்த்தியமாகக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவைத் தெரிவிப்போம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

விவேக் ஓபராய் `ripple effect' என்ற விஷயத்தைத் தெரிவித்து தனக்கு இருக்கும் செல்வாக்கு என்னவென்பதை இவர்களிடம் விளக்க முயன்றுள்ளார். ``என்னை மொத்தம் 25-30 லட்சம் பேர் பின்தொடருகின்றனர், நான் ஒரு ட்வீட்டை பதிவிட்டால் அது ஒரு `ripple effect'-ஐ உண்டாக்கும். அதை எப்படியும் பலரும் ரீட்வீட் செய்வர். இதனால் சென்றுசேரும் மக்களின் அளவு 10 மடங்கு அதிகரிக்கும். இதனால் சுமார் 3 கோடி பேரை என் ட்வீட் சென்றுசேரும்" என அவர் பேசியுள்ளார். இவர் சொல்லும் கணக்கை வைத்துப் பார்த்தால் 2.6 கோடி பேர் பின்தொடரும் சன்னி லியோன் போன்றவர்களின் பதிவுகள் எத்தனை பேரை சென்றுசேருமோ?

இதில் சோகம் என்னவென்றால் இவர்களில் சிலர் சமூகம் குறித்தும் அரசு குறித்தும் தீவிரமாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஒருவர் மோடியின் வாழ்க்கை கதையில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பணத்திற்காக மக்களை ஏமாற்றத் துளியும் தயங்காமல் தயாராக இருக்கின்றனர் இவர்கள். இவர்களின் இந்தக் கருத்துகளைத்தான் பலரும் பகிர்ந்துவருகிறோம்.

இவர்கள் அணுகியதில் வித்யா பாலன், அர்ஷத் வர்ஸி, ராசா முராத், சவும்யா தண்டொன் ஆகியவர்கள் மட்டும்தான் இதைத் திட்டவட்டமாக வேண்டாம் என மறுத்துள்ளனர். வணிகத்திற்காக எங்கள் அரசியல் கருத்தியலை மாற்றிக்கொள்ள விருப்பமில்லை எனத் தெளிவாக இவர்கள் கூறியுள்ளனர். இதையும் கோப்ராபோஸ்ட் தெளிவாக எடுத்துக்கூற இவர்களை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர் நெட்டிசன்கள்.

அரசியல் மேடைகளைத் தாண்டி இணையத்திற்கும் வந்துவிட்ட இன்றைய சூழலில் இணையத்தில் வரும் போலிச் செய்திகள் மற்றும் பிரசாரங்களை சமூகவலைதளங்களில் களைந்தெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இப்போது மக்களை ஏமாற்றும் இதுபோன்ற விஷயங்களையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என கோப்ராபோஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், எப்படிக் கண்டறிவது மக்களாகிய நாம்தான் இவர்களின் இந்த நஞ்சை உட்கொள்ளாமல் பத்திரமாக சுயசிந்தனையுடன் மெய்ப்பொருள் கண்டு விழித்துக்கொள்ளவேண்டும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...